Tuesday 9 July 2013

தூத்துக்குடியில் இருந்த சார்லஸ் தியேட்டர்.





இந்த தியேட்டர் 1970 இல் கட்டப்பட்டது. நான் நினைவு தெரிந்து பார்த்த காலத்தில், இந்த தியேட்டர் தனது வயோதிக காலத்தில் இருந்தது. அது கட்டப்பட்ட காலத்தில் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்கும் என்று என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்திருக்கிறது. ஏனெனில், அது ஒரு அரண்மனை போல் வடிவமைத்து கட்டப்பட்டிருந்தது.

தென் தமிழகத்தின் முதல் தியேட்டரா என்று தெரியவில்லை. அப்படியே இல்லாவிட்டாலும், விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே திரையரங்குகள் அப்பகுதியில் இருந்திருக்கும். திரையரங்கை பார்ப்பதே அதிசயம் என்ற காலத்தில், இது போல் கட்டப்பட்ட திரையரங்கு எத்தகைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்?

இந்த தியேட்டரின் முன்பகுதியில் ஒரு தோட்டம். முன்பகுதியில் இருந்து சாய்வான நிலையில் மேல்நோக்கி பால்கனி உயரத்திற்கு செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலிருந்து இதில் நீர் பாய்ந்துக்கொண்டிருக்கும். மைசூர் பிருந்தாவன் நினைவுக்கு வருகிறதா? அது பார்த்திருக்காவிட்டால், ‘குரு சிஷ்யன் - வா வா வஞ்சி இளமானே’ நினைவுபடுத்துக்கொள்ளுங்கள். அதனுடைய சிறிய மாடல். பால்கனியில் இருந்து தியேட்டரின் வெளியே வர, இதன் இடையே படிகள் அமைத்திருப்பார்கள்.

நான் சென்ற காலத்தில் ‘இருக்கிற தண்ணி பிரச்சினையில் இது வேறயா?’ என்று வழிந்தோடும் தண்ணீரை நிறுத்திவிட்டார்கள். மற்ற விஷயங்களைப் பார்ப்போம்.

இந்த தியேட்டரில் இருப்பது போல் பால்கனியை எங்கும் பார்த்ததில்லை. பொதுவாக, பால்கனி திரையின் நேர் எதிர் பக்கம் இருக்கும். இங்கும் அந்த பால்கனி உண்டு. அது தவிர, இரு பக்கமும் இரு சிறு பால்கனிகள் உண்டு.



எல்லாம் பெஞ்ச், சேர் என்றாலும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று சாதாரணமாக பெயர் வைத்துவிடவில்லை. DUKES, MARQUESS, KINGS CIRCLE. இவைதான் இங்கு இருக்கும் வகுப்புகளின் பெயர்கள். அதுபோல், எந்த ஒரு விஷயத்தையும் சாதாரண கட்டிட வடிவமைப்பில் கட்டவில்லை. வட்டமாக சுற்றி சுற்றி செல்லும் படிக்கட்டுகள், வேலைப்பாடுகளுடன் தூண்கள். ஏன், குப்பைத்தொட்டி கூட ராஜா காலத்து மாடலில் தான் இருக்கும்.

இது நான் கேள்விப்பட்டது. இந்த தியேட்டரை கட்டிய சமயம், அதன் உரிமையாளரிடம் படம் வாங்கி திரையிட பணம் இல்லை. தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் கொண்டு, திரையரங்கைக் கட்டியிருந்தார். அப்பொழுது எம்.ஜி.ஆர் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை பணம் வாங்கிக் கொள்ளாமல் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கும் அப்படத்தை வெளியிடுவதில் சிரமம் இருந்தது. படம் வெளியாகி பெரும் வெற்றி. அந்த திரைப்படத்திற்கு வந்த கூட்டத்தின் வரிசை நெடுந்தொலைவுக்கு நின்றது. படத்தில் வசூலான பணத்தை கொண்டு, அந்த கடனை உரிமையாளர் திருப்பி கட்டினார்.

இப்படி பெருமையுடன் ஆரம்பிக்கப்பட்ட திரையரங்கு, பிற்காலத்தில் வெறுமையானது. முன்னால், கொட்டிக்கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. செடிகள் வளர்ந்திருந்த பகுதியில் ஜல்லியில் கான்கிரீட் போடப்பட்டது. பெரிய திரையரங்கு என்பதால், பராமரிப்பு சிரமம். இது தியேட்டர் அல்ல, குடோன் என்று விமர்சிக்கப்பட்டது. பொதுவாகவே, தூத்துக்குடி திரையரங்குகளில், இருக்கும் சீட் எண்ணிக்கைக்கு ஏற்ப டிக்கெட் கொடுக்க மாட்டார்கள். இண்டர்வெல் வரை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இந்த தியேட்டரும் புதுப்படங்களின் ஆரம்ப நாட்களில் பாதி தூத்துக்குடியை அடைத்துக்கொண்டு இருக்கும்.

கடைசி வரை அந்த பெஞ்சை மாற்றவில்லை. சிலர் வசதியாக படுத்துக்கொண்டு படம் பார்த்தார்கள். திரைப்படங்களில் இசை வேறொரு கட்டத்தை அடைந்த போது, இத்திரையரங்கின் ஒலி அமைப்பு அதற்கு ஈடுக்கொடுக்கவில்லை. வௌவால்கள் குடியிருக்க தொடங்கின.

ஒரு கட்டத்தில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. வேறொருவர் வாங்கினார். பிறகும், மூடப்பட்டே கிடந்தது. சிறிது காலம் கழித்து, இன்னொரு நிறுவனம் இந்த இடத்தை வாங்கியது. கால மாற்றத்திற்கேற்ப, திரையரங்கு இடிக்கப்பட்டு, வணிக வளாகம் கட்டப்பட்டது

0 comments :

Post a Comment